கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவற்றின் துவக்க விழா நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் 13.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணம், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் PET - CT SCAN கருவி, 1.5 கோடி ரூபாய் செலவில், இருதய ரத்தக் குழாய் அடைப்புகளை ஸ்டென்ட் வைத்து சரிபார்க்க பயன்படும் OCT எனப்படும் கருவி, இருதயவியல் துறை கேத் லேப் ஆவியவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், "கோவையில் பல்வேறு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, நான்கு மாதங்களில், 500 மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள 49 மையங்களில் தலா, 4 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், பிற தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதில்லை. மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அனைத்து பகுதிகளிலும் உள்ளது.
இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தடுக்கவே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆய்வக நுட்பனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என கூற முடியாது. காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.