கோவை: தமிழ்நாடு அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கோவை மாவட்டம் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில், செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.
பின்னர், 21 தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சூலூரில் பொங்கல் தொகுப்புகளைப் பொதுமக்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜனவரி 3) பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 குடும்பங்களுக்கு, வரும் 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசுத் தொகை, பரிசுப்பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இழப்பீட்டை இரட்டிப்பாகக் கேட்பதா?
அப்போது, உயர் மின் கோபுரம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே ஒரு திட்டத்துக்கு இழப்பீடு பெற்றவர்கள்; அந்த இழப்பீடு போதாது எனத் திட்டங்கள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது, போராடுவது நடைமுறையில் இல்லாதது.
போராட்டத்தை வழி நடத்துபவர்கள் இரட்டிப்பாக இழப்பீடு பெற்றுத் தருவதாகக் கூறிவரும் சூழலில், அந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்ய வேண்டிய நிலையுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "95 விழுக்காடு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடு போதவில்லை என்று சொன்னால் நீதிமன்றத்தை நாட வேண்டும். இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமைப்பது சாத்தியமல்ல! இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.