கோயம்புத்தூர்:மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னை திரும்புகையில் விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சர்வதேச தரத்திலான கிரிக்கெட் (IPL) உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றபோது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளை பின்பற்றுகின்ற வகையில், அந்த விளையாட்டுப் போட்டி நடைபெறுகின்ற இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கக்கூடிய வகையில், மது பயன்படுத்தக்கூடிய அனுமதிகள் வழங்கப்படுகிறது.
இன்று பல்வேறு செய்திகள் வருவதைப் போல திருமண மண்டபங்களில் மற்ற நிகழ்ச்சிகளில் அது போன்ற அனுமதிகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது. எந்த திருமண நிகழ்ச்சிகளுக்கும் திருமண மண்டபங்களுக்கும் ஏனைய நிகழ்ச்சிகளுக்கும் ஒருபோதும் மதுபானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அரசு அனுமதி வழங்காது. சர்வதேச தரத்திலான நிகழ்ச்சிகளான உலக முதலீட்டாளர்கள் மாநாடு அல்லது சர்வதேச அளவிலான நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது மட்டும் சிறப்பு அனுமதிகள் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று சொன்னால் இந்தியாவில் பிற மாவட்டங்களில் பின்பற்றப்படக்கூடிய நடவடிக்கைகள், இங்கும் பின்பற்றப்பட வேண்டும், அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உடைய உச்சபட்ச மின் தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகா வாட்டை கடந்து மின் நுகர்வு வந்துள்ளது.
முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக டிசம்பர் ஜனவரி மாதங்களில் அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு, குறைந்த அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டெண்டர் மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்த மூன்று மாதத்தில் மட்டும் 1312 கோடி ரூபாய் சேமிப்பு உருவாகி உள்ளது. இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும், அதனை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது.
ஒரு சிலர், அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக பொதுவான ஒரு கருத்துகளைப் பரப்புகிறார்கள். எனவே, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பொழுது தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். 94987 94987 என்ற எண்ணில் தகவலைத் தெரிவிக்கலாம்” என்றார்.
ஜி ஸ்கொயரில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்த அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என சொன்ன வார்த்தைக்கும் சொத்து பட்டியலை வெளியிட்டதற்கும் வித்தியாசம் உள்ளது. அனைவரது சொத்து பட்டியலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய சொத்து என்ன என்பதையும், நான் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளேன்.
அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ ஆட்சேபனை தெரிவித்து இருக்கலாம் அல்லது அதன் பிறகு வழக்கு தாக்கல் செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறிவிட்டு எந்த ஆதாரமும் அடிப்படைத் தன்மையும் இல்லாமல் குறைந்தபட்ச அறிவு கூட மண்டையில் இல்லாமல் இதனை வெளியிடுகிறேன் எனச் சொல்லுவது, இதெல்லாம் என்ன? இரண்டு வார்த்தைகளுக்கும் (சொத்து பட்டியல், ஊழல் பட்டியல்) என்ன வித்தியாசம் என்பதை படித்து, தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.
சிலர் களத்தில் நின்று இயக்கத்தை வளர்க்க முயற்சி செய்வார்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர். நாங்கள் அவர் வழியில் நின்று பணியாற்றி வருகிறோம். சிலர் உங்கள் மூலமாக (ஊடகங்கள் மூலமாக) விளம்பரத்தைத் தேடுவார்கள். அவர்கள் அளிக்கின்ற பேட்டியை எடுத்து அவர்களுக்கு தகுந்தார்போல் எடிட்டிங் செய்து பயன்படுத்திக் கொள்வார்கள்.