கோயம்புத்தூர்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “வருகிற ஜனவரி 27ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவுக்கு வரும் மக்களின் அடிப்படைத் தேவைகள், வாகன நிறுத்தும் இடம் மற்றும் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெகு விரைவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
1,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதான கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், 2022 - 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 104 திருக்கோயில்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் பல புராதான கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு நிதியை எதிர்பார்க்கிறோம். ஆன்மீகவாதிகள் சிறப்பாக இருக்கும் ஆட்சியில், நிதி தரப்படும் என எதிர்பார்க்கிறோம். புராதான கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கப்படும்.
மருதமலை கோயிலுக்கான ரோப் கார் திட்டத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடன், உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கும். மருதமலை உள்ளிட்ட மலைக் கோயில்களுக்கு அருகே குப்பை கொட்டப்பட்டால், உடனுக்குடன் அகற்றும் பணியை இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும்.
பக்தர்களின் உபாதைகளை களைய அனைத்து நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும். கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “யார் தவறு செய்தாலும் எங்களின் கவனத்திற்கு வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.