கரோனா பரவல் மூன்றாவது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், சமட்டா பவுண்டேசன், அகர்வால் பவுண்டேசன் ஆகிய தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில், பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரான் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு கூறும் விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ”கரோனா தொற்று அரசிற்கு ஒரு சவாலாக உள்ளது. மக்களின் பொருளாதாரம் அவர்களது வாழ்க்கை முறையை புரட்டிப்போடும் அளவிற்கு மாறியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இருமுறை வருகை தந்தார். அப்போது, ”தனக்கு சூட்டப்பட்டது மலர் கிரீடம் அல்ல. முள் கிரீடம்” என வேதனையுடன் கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் கரோனா தொற்று படிபடியாகக் குறைந்துள்ளது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. அதை உணர்ந்து பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கடைமை உணர்வுடன் செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.