கோயம்புத்தூர்:ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள நியாய விலைக்கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இதனை முதலமைச்சர் நாளை மறுதினம் (ஜன.09) சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும். இந்த நாட்களில் வாங்க முடியாதவர்களுக்கு 13ஆம் தேதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 404 நியாய விலை கடைகள் மூலம் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.
பொங்கல் பரிசுப் பொருட்கள் நூறு சதவீதம் பொருட்கள் வந்துள்ளது. கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது. முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் புரதச் சத்தும் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் துவங்கப்பட்டு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அதில் இரண்டு பொருட்களைக் கடந்த ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பல மாவட்டங்களிலும் தேங்காய் விலை குறைவாக உள்ளதால், நியாயவிலைக்கடை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். டாக்டர் ராமதாஸ், அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.