கோயம்புத்தூர்:லாலி ரோடு சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் அத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட வேளாண் கருவிகளின் புகைப்பட கண்காட்சி அரங்கை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் கருவிகளை பார்வையிட்டார். இதில் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் சங்கம் சார்பில் விற்பனைக்கு இருந்த எண்ணெய் பாட்டிலை தொழில்நுட்ப துறை அமைச்சர் பணம் கொடுத்து வாங்கினார். மேலும் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையில் சாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், "உழவர் நலத்துறைக்காக தனியாக பட்ஜெட் போட்டு 37 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.
52 விதமான வேளாண் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான்காயிரம் ஐந்தாயிரம் என்று இருந்த தொற்று தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை இம்மாத கடைசி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
கோவை மாவட்டத்தில் 22 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 23.98 விழுக்காடு மட்டுமே வனம் இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டு காலத்தில் அதன் பரப்பளவை 33 விழுக்காடு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
1,30,060 ஹெக்டேர் அளவிற்கு மரம் நடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. யானை மனிதர் மோதல் தடுக்க வன எல்லைகளில் 3 மீட்டருக்கு அகழி வெட்டப்பட்டு, இருபுறமும் கான்கிரீட் சுவர்கள் ஏற்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
வனத்தின் பரப்பளவு உயர்த்த நடவடிக்கை இதையும் படிங்க:ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி