கோயம்புத்தூர்:தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் ஒரு நிகழ்வாக குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக் கூடத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அங்குள்ள கருவிகளைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, “கோவையில் ஆய்விற்காக வந்தோம். தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் மூலம் ஏர்ஜெட் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கான 9 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏர்ஜெட் இயந்திரம் மூலம் உற்பத்தியைப் பெருக்க என்னென்ன தேவை இருக்கிறது, என்னென்ன குறை இருக்கிறது என்பதை நேரில் கேட்டு ஆய்வு செய்துள்ளோம்.
தற்போது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு வருடங்களில் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, இதுவரை யாரும் செய்யாத அளவிற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது. பழைய விசைத்தறி இயந்திரங்களை எடுத்துவிட்டு ஏர்ஜெட் இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்போது கோவையில் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் இருக்கின்றது. மேலும், 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர்ஜெட் இயந்திரம் அமைப்பதோடு அந்த இயந்திரத்திற்குத் தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பெற உள்ளோம்.
கடன் வாங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 25 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றனர். கூடுதல் இயந்திரங்கள் மூலம் வரும் உற்பத்தி லாபத்தைக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு கடன் செலுத்தினால், அதன் பிறகு மின்சாரம் செலவு இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு லாபமாக இருக்கும்.
இதன் மூலம் வரும் காலத்தில் இந்த துறை லாபம் இருக்கும் துறையாக மாறும். தமிழ்நாட்டில் 18 ஸ்பின்னிங் மில்கள் இருந்தது. இதில் 12 மூடப்பட்டு உள்ளது. 6 மில்கள்தான் தற்போது இயங்குகிறது. அதிலும், ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்றால், அந்த 6 மில்களும் மூடப்பட்டிருக்கும்.
தற்போது அந்த மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் அளவிலான நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கிறது.