கோயம்புத்தூர்மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வருகை புரிந்துள்ளார். அவர், கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்கு இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துரையாடினார்.
அப்போது ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சரை வரவேற்கும் வகையில் பலகையில் ‘தொட்டனைத் தூறும்’ என்ற திருக்குறள் மற்றும் விளக்கம் எழுதப்பட்டு இருந்தது. அந்த திருக்குறளில் ‘தொட்டனைத் தூறும்’ என்பதற்குப் பதிலாக ‘தொட்டனைத்து ஊறும்’ என தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதனைக் கவனித்த அமைச்சர் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருந்ததை, வரிவரியாக படித்துக் காட்டி தவறை சுட்டிக்காட்டினார். மேலும், திருக்குறளை பிழை இல்லாமல் சரியாக திருத்தி எழுதுமாறும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் 102 தொழிற்பயிற்சி நிலையங்களில் 2ஆயிரத்து 871 கோடி ரூபாய் செலவில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இதனால் இளைஞர்கள் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்.