கோவை:அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி விதிப்பதை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் கோரிக்கை வைக்கப்படும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம் இன்று (நவ.7) வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்ககளின் வணிகர் சங்க நிர்வாகிகளும், அந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, '1999ஆம் ஆண்டு இந்த சமாதானத் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவையில், இருக்கும் 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து 1,002 சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன. அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி இருப்பதை சரிசெய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர் எனவும், மத்திய அரசிடம் அரிசிக்கான கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம். இது போன்று வணிகவரித்துறையில் தள்ளுபடி செய்து இருப்பது வரலாற்றில் கிடையாது.
வணிக பெருமக்கள் 12 ஆண்டு காலம் சலனப்பட்டு இருந்தார்கள், அவர்களுக்காகவே இந்த சமாதானத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 90 சதவீதம் வணிகர்கள் நியாயமாக இருந்தாலும் 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரைக் கெடுக்க இருக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதானத் திட்டத்திற்கு வந்துவிடலாம்.