கோயம்புத்தூர்:சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் இன்று (செப்.07) நடைபெற்றது. இந்த முகாமினை வீட்டு வசதிவாரிய அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கோவை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழக முதலமைச்சரின் களஆய்வு விரைவில் கோவை உள்பட பல மாவட்டங்களில் இருக்கின்றது. அதற்குள் பல பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.
கடன் உதவி பெற 3 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து இருக்கின்றனர். 20 வங்கிகள் இதில் பங்கு பெற்று இருக்கின்றனர். அனைவரும் இன்றைய தினமே கடன் தொகையைப் பெற இருக்கின்றனர். அடுத்த கட்டமாக வருகிற 10ஆம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியிலுள்ள கற்பகம் கல்லூரியில் இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.
மாணவர்கள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்வி கடன் உதவி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதே போல காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை திட்டம், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகின்றது. மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.