தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கலுக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு இல்லை - அமைச்சர் முத்துச்சாமியின் விளக்கம்

Minister Muthusamy Byte: டாஸ்மாக் பொங்கல் விற்பனைக்கான இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, விற்பனையை குறைக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் இலக்கு என மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துச்சாமி
அமைச்சர் முத்துச்சாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 4:40 PM IST

அமைச்சர் முத்துச்சாமி

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் மூன்று புதிய பள்ளி கட்டிடங்களுக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்த அவர், “டாஸ்மாக் பொங்கல் விற்பனைக்கான இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, விற்பனையை குறைக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் இலக்கு. டாஸ்மாக்கில் விற்பனையாகும் தொகை தவறான இடத்திற்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கவே வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது.

அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் உள்ள குளங்களுக்கு மட்டும் தண்ணீர் செல்லும்படி பணிகள் நடைபெற்று உள்ளது. இத்திட்டத்தில் புதிதாக குளம் குட்டைகளை சேர்க்க முடியாது என அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே புதிய திட்டத்தில் இந்த குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தனர். சூலூர் கலைமகள் நகரில் உள்ள நியாய விலை கடைக்கு உட்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு இந்த பரிசு தொகுப்புகள் வழங்கினார். அப்போது ஆயிரம் ரூபாய் தொகை கொண்ட கவரை திறந்து பார்த்து சோதித்தார்.

மூதாட்டி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு கவரை சோதித்த அமைச்சர், ஆயிரம் ரூபாய் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள சோதனை மேற்கொண்டதாக அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம் நகைப்புடன் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்து 537 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 4 ஆயிரத்து 836 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கம், முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக சுமார் 122 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு பொருட்கள், ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜன 14ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பரிசு பொருட்கள் குறைக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சென்னை, மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேண்டிய கடினமான சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவி சரிவர கிடைக்கப்படாத போதும் இடங்களை சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:"முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்" - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

ABOUT THE AUTHOR

...view details