கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில், கோவை முத்தரையர் நலச் சங்கத்தின் 21ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடானது அனைத்து மாணவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், அனைத்து மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், "கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளை தொழில் வளம் மிகுந்த பகுதியாக மாற்றி பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் சாதனை புரிந்து வருகிறார் எனவும், அந்த வகையில், கோவை தடாகம் பகுதியில் 174 செங்கல் சூளைகள் ஹாக்கா எனும் மலைப் பகுதிகளில் இருந்ததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் கடந்த காலத்தில் மூடப்பட்டதாகவும், விரைவில் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மூடப்பட்டுள்ள 174 செங்கல் சூளைகளையும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதேபோல், கல் குவாரிகளில் வெடி வைப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் உடனடியாக கவனத்தில் எடுத்து இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் எனக் கூறினார். மேலும், காவிரி மற்றும் உப நதிகள், தாமிரபரணி, வைகை போன்ற நதிகளை பாதுகாப்பதற்காக மிக முக்கிய நடவடிக்கைகளை முதற்கட்டமாக மேற்கொண்டு வருவதாகவும், காவிரி ஆற்றை பொருத்தவரை “நடந்தாய் வாழி காவிரி”என்ற திட்டத்தின் மூலம் அதனை பராமரிக்க 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த 10 சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பட்சத்தில் முழுவதுமாக அனைத்து ஆறுகளும், நதிகளும் தூய்மையாக மாறி ஆறுகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
இதேபோல், பொது சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சாயக் கழிவுகளை ஆறுகளில் கலந்து விடும் பட்டறைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான சிறப்பு குழு அமைத்து கண்காணித்து வருவதாகவும் இயற்கை மட்டுமல்லாது நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் முக்கியமான திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நீர்நிலைகளில் சாயப் பதிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது என்பதால் அனைவரும் அது போன்ற தவறுகளை செய்யாமல் பட்டறைகள் தொழில்களை மேற்கொள்ள வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:ராகுலுக்கு எம்பி பதவியை மீட்டுத் தர தாமதம் - நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்க சதி என குற்றச்சாட்டு!