கோயம்புத்தூர்: வால்பாறை வட்டம், சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அணில் ஓராண் என்பவரை 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது. இதனையடுத்து அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அணில் ஓராணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “அணில் ஓராணை சிறுத்தை தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, 4 ஆயிரம் ரூபாய் முன்பு தரப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வேட்டைத் தடுப்பு காவலர்களையும் வன அதிகாரிகள் தலைமையில் 12 பேர் கொண்ட தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
வனப் பகுதிகளில் இருந்து வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி வன விலங்குகள் ஊருக்குள் வந்து கால்நடைகளையோ, செல்லப் பிராணிகளையோ ஏதேனும் செய்தால், அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும். மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் பாதுகாப்பதற்கு மின் வேலிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆகியவற்றை யானைகளுக்குப் பாதிப்பு வராத வகையில் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.