கோயம்புத்தூர்: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையில் ரூபாய் 1.02 கோடி மதிப்பில் கட்டண சிகிச்சை வார்டை திறந்து வைத்தார். பின்னர், ரூபாய் 18 லட்சம் மதிப்பில் CSR நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ரூபாய் 15.44 லட்சம் மதிப்பில் விஷமுறிவு அவசர சிகிச்சைக்கான மாநில பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பாம்புக்கடி நச்சுமுறிவு சிகிச்சைக்கான பயிற்சிகள் வழங்குவதைப் பார்வையிட்டார். தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூபாய் 8.86 லட்சம் மதிப்பில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்கும் இதயப் பாதுகாப்பு மருந்துகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்க இதயப் பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 8713 துணை சுகாதார நிலையங்கள், 2206 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்புக்கான மருந்து கையிருப்பு வைக்கப்படும். தமிழகம் முழுவதும் ரூபாய் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பாம்பு கடி, நாய் கடி போன்றவற்றுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் இருந்தது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் என 2286 மையங்களில் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு உள்ளது.
மேலும் பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 ஆயிரம் செவிலியர்களுக்கு விஷக்கடிக்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், கோவை அரசு மருத்துவமனை மாநில அளவிலான பயிற்சி மையமாக அங்கீகாரம் பெறுகிறது.
கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை துவங்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் கட்டண வார்டு துவங்கப்படும் என கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் துவங்கப்பட்டுள்ளது.