கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவினை, இன்று (அக்.13) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
விழாவுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உலக கை கழுவும் தினம் இன்று (அக்.13) கடைபிடிக்கப்பிடிக்கப்படுகிறது. அதன் நிகழ்வு கோவையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 'சற்றே குறைப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்பான காணொலி பயோ டீசலில் கின்னஸ் சாதனை
உப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை உணவில் குறைத்தல், உபரி உணவுகளை வீணாக்காமல் உபயோகப்படுத்துதல் ஆகிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். திருமணம், தனியார் நிகழ்வில் மீதமாகும் உபரி உணவை, ஆதரவற்ற மக்களுக்கு கொண்டுசெல்ல தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு கைகோர்த்து செயல்படவுள்ளது.
அதற்கான வாகனத்தை இன்று (அக்.13) தொடங்கி வைத்துள்ளோம். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கொள்முதல் செய்து பயோ - டீசல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று கின்னஸ் சாதனை முயற்சிக்காக கோவையில் 550 டன் அளவிலான ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ - டீசலாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளோம். ஏற்கெனவே பிரேசில் நாட்டில் 500 டன் எண்ணெய்யை அவ்வாறு தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி?
அரசு மருத்துவமனையில் ஒன்றரை கிலோ எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க, ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தனிப்பிரிவு திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கோவையில் மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாகனங்களை இன்று (அக்.13) தொடங்கி வைத்துள்ளோம். அதன்படி ஐந்து மண்டலத்திற்கும் தனித்தனி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசானது 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளித்தவுடன், முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் பணிகளைத் தொடங்கவுள்ளோம்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பண்டிகைக் காலம் என்பதால் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. ஒன்றிய அரசு நிபுணர் குழு ஆய்வுக்குப் பிறகு, மருத்துவப்படிப்பிற்கான கூடுதல் இடங்களை கேட்டுப்பெறுவோம்' என்றார். இதையடுத்து தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் செப்.30ஆம் தேதி வரை 3,090 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 362 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!