கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினருடன், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் பேசுகையில், “தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 12 லட்சத்து 67 ஆயிரத்து 809 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சிஎஸ்ஆர் நிதியில், இலவச தடுப்பூசி
அரசின் சார்பில் ஒரு கோடியே 82 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசியில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். தனியார் மருத்துவமனைக்கான 25 விழுக்காட்டையும் பெற்று, கூடுதலாக மக்களுக்கு இலவசமாக செலுத்தினால் தடுப்பூசி போடும் பணி நிறைவிற்கு வரும்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ம.சுப்பிரமணியன் தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியினை பெற்று, அதன் மூலம் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் தொடர்பாக 117 மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்திற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இலவச தடுப்பூசி போடும் திட்டத்திற்காக, 61 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இன்று (ஜூலை 20) வழங்கியுள்ளனர். இதன் மூலம் 7 ஆயிரத்து 878 பேருக்கு கோவிஷீல்ட் மருந்து செலுத்த முடியும். இதனை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டம்
நான்கு மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோர் சிஎஸ்ஆர் நிதிகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களை அணுகி கொடுத்தால், அதை முறைப்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தலாம். இந்த திட்டம் மூலம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க:ராகுலின் சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்வதால் பாஜகவுக்கு லாபம் கிடையாது - குஷ்பு