கோயம்புத்தூர்:பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர்
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது:அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, “தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 112 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 97 சதவீத பணிகள் நிறைவுற்று, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தார் சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் அமைக்கும் பணிகளும், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும்: இந்த மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, இந்த மேம்பால கட்டுமானப் பணிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். இங்குள்ள மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேம்பாலப் பணிகள் முடிவு பெறும்.