பொள்ளாச்சி:கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தை முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் உலாவும் மக்னா யானை, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சம் அடைந்துள்ள கிராம மக்கள், மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதில்லை எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 16) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது, யானையைப் பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் பிரியங்காவிடம் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அதிகாரியிடம் சார் ஆட்சியர் பிரியங்கா விளக்கம் கேட்டார். மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார். எனினும், உரிய விளக்கம் தரப்படவில்லை எனக் கூறிய விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுகுறித்து விவசாயி ஸ்டாலின் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்னா யானையைப் பிடிக்க பலமுறை அதற்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. அதுவே அதன் உயிருக்கு ஆபத்து தான். மேலும் சரளப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை யானை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் விட்டாலும், யானை மீண்டும் ஊருக்குள் வந்துவிடுகிறது. எனவே, யானையைப் பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.