கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், கிருஷ்ணா குளம் உள்ளது. இப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சாலையோரம் மாத்திரைகள், மருந்து பாட்டில்கள் என நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்து பொருட்களும் குவியலாக கொட்டிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மருந்துகள் அனைத்தும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய காலாவதி ஆகாத மாத்திரை மருந்துகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கொட்டப்பட்டிருந்த மருந்து மாத்திரைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள் எந்த மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டது. ஜமீன் ஊத்துக்குளி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டதா என மருத்துவக் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சாலையோரம் குவிந்து கிடந்த மருந்துகள் இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பயன்படுத்தக் கூடிய மருந்துகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இங்கு மருந்துகளை கொட்டிய அரசு மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:’மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடிவடிக்கை’ - மருந்துக் கடைகளுக்கு எச்சரிக்கை