கோயம்புத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன். தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதி அறையில் இருந்த அஜய்குமார் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து மயங்கியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறகு அஜய்குமார் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே அஜய்குமார் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவர் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்ததால் இருதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளாக இதேபோல போதை ஊசி செலுத்தி கொண்டு வந்ததும் தெரியவந்தது.