கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம், கோமங்கலம்புதூர் ஊராட்சிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, "தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. கால்நடை பராமரிப்புத் துறையைப் பொறுத்தவரை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து கால்நடைகளுக்குப் நோய்த்தொற்றுகள் பரவினால் உடனடியாக எந்த நோயாக இருந்தாலும் கட்டுப்படுத்தும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் சோதனைச்சாவடிகள் அமைத்து பரிசோதனை செய்யப்படுகின்றன.
கால்நடைகளுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் வரும் முன் காப்போம் என்ற வகையில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 463 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து லட்சம் கால்நடைகள் பயன்பெற்று பொதுமக்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.
அனைத்துவிதமான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தச் சட்டமாக இருந்தாலும் மக்கள் நலன், விவசாயிகள் நலன் கருதிதான் முதலமைச்சர் முடிவெடுப்பார், யாருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த முடிவும் முதலமைச்சர் எடுக்க மாட்டார்" என்று தெரிவித்தார்