மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் அப்போது அவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும் டெல்லியில் விவசாயிகளை அடக்குகின்ற காவல் துறையினரைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபன், "டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஒடுக்குமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். விளை பொருள்களை கார்ப்பரேட்களிடம் தரும் கொடூர சட்டத்தை கைவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
பின்னர் போராட்டக்காரர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். உடனே காவல் துறையினர் அனைவரையும் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!