கோயம்புத்தூர்:கோவை ஆலாந்துறை அடுத்த மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனப்பகுதியில், தற்போது அதிக அளவில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர். கேரளா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், தண்ணீர் தேடி நாள்தோறும் ஏராளமான யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து வருவதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மதுக்கரை வனச்சரகம் கரடிமடை அடுத்த மூலக்காடு பகுதியில் நேற்று (அக்.11) ஒற்றை ஆண் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்திற்குள் யானை புகுந்ததைப் பார்த்த தோட்டத் தொழிலாளி சண்முகசுந்தரம் என்பவர், யானையை விரட்ட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது யானையை விரட்ட முயன்ற போது, சண்முகசுந்தரம் ஓட முடியாமல் கீழே விழுந்துள்ளார். அப்போது யானை தாக்கியதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், அங்கு வந்த சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சி செய்தனர்.