கோயம்புத்தூர்: இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய்(30), இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சுஜய், திருமணத்துக்குப் பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சுஜயின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்துக்காகக் கேரளாவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் டி.கோட்டாம்பட்டியில் உள்ள தனது ஆண் நண்பர் சுஜய் வீட்டு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுஜய், சுப்புலட்சுமியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில், இளம்பெண் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்னதாக பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.