கோயம்புத்தூர் : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் ஊரடங்கைப் பயன்படுத்தி குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டறியும்பொருட்டு, ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சூலூர் நான்கு ரோடு அருகே காவல் துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட மினி டெம்போ ஒன்றை காவல் துறையினர் நிறுத்துமாறு சைகை செய்தனர். வாகனத்தை நிறுத்திய டெம்போ ஓட்டுநர், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினார். ஆனால், வாகனத்தில் உடன் வந்து தப்பியோட முயற்சித்த மற்றொருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முல்லா ராம் என்பவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான குட்காவை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, காய்கறி, டீத்தூள் பாக்கெட்களை மேலடுக்கி, மூட்டை மூட்டையாக குட்காவை கடத்திவந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் 650 கிலோ குட்காவை பறிமுதல்செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். நடிகர் விஜய் பட ’குருவி’ கதாபாத்திரம்போல ஒரு பொருளை மற்றொரு இடத்திற்கு கொண்டுசேர்க்க முயன்ற நபர், இப்போது சிறையில் சிக்கி கூண்டிலடைபட்ட குருவியாகியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சாமியார் வேடமிட்டு கஞ்சா கடத்திய இருவர் கைது!