கோவை: கோபிச்செட்டிப்பாளையம், வேலுமணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது வீட்டின் பின்பகுதியில் வசிக்கும் மில் தொழிலாளி கமலா, கடந்த மாதம் 22ஆம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கள்ளிப்பட்டி பிரிவின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகவும், கமலாவின் வீட்டை புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கமலாவும் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
கவனத்தை திசை திருப்பி கொள்ளை
அப்போது வீட்டில் இருந்த சுந்தரியிடமும், 18 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அலுவலர்கள் நிதி கொடுக்க வீட்டுக்கு வரும்போது, நகை அணிந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தரி, தனது நகையை கழற்றி கட்டில் மெத்தைக்கு அடியில் வைத்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து மாயமாகியுள்ளார். பின்னர் இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில், கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.