கோயம்புத்தூர்: சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணியூர் சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதை அடுத்து, அவரை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் வெங்கடேஸ்வரன் (32) என்பதும், கஞ்சாவை ஆந்திராவில் இருந்து இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு கஞ்சாவை சில்ல்றை மற்றும் மொத்த விற்பனை முறையில் விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, வெங்கடேஸ்வரனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக குன்றத்தூர் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சைமன் டிப்பர்மா (32), சஞ்சு டிப்பர்மா (27), ஜெமிஷ் டிப்பர்மா (22) மற்றும் சுரஜ் டிப்பர்மா (32) ஆகிய நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனையிட்டதில், அவர்களிடம் 30 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரனையில், அவர்கள் நான்கு பேரும் பல்லாவரம் பகுதிகளில் உள்ள சாலையோர டீ கடைகள், உணவகங்களில் வேலை செய்து கொண்டே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Ghost Train : அதிபர் புதினின் "பேய் ரயில்"... என்னதான் இருக்கு அப்படி?