"அடுத்த காரின் சாவி கமல் சார் கையில தான்" - கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா உறுதி! கோயம்புத்தூர்: கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநராக பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வந்தார் 23 வயதே ஆன ஷர்மிளா. இது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. சர்மிளாவைப் பற்றியச் செய்திகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வந்த நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில், பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஷர்மிளாவுடன் உரையாடினார். இந்நிலையில், ஷர்மிளாவிற்கும் பேருந்து உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர், ஓட்டுநர் பணியில் இருந்து ஷர்மிளா திடீரென விலகினார். மேலும் தான் சொந்தமாக தொழில் செய்யப்போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கார் வழங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஷர்மிளாவிற்கு கடந்த மாதம் சொகுசு கார் ஒன்றை வழங்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் கூறிருந்த நிலையில், மக்கள் நீதி மயத்தின் மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் பிளமேட்டில் உள்ள மகேந்திர கார் ஷோரூமில் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மகேந்திர மராசோ காரினை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம், "தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று இந்த கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 3 வருடத்தில் அவர் பெரிய தொழில் முனைவோராக வர வேண்டும்" என்றார்.
மேலும் கமல் பண்பாட்டு மையம் மூலமாக இந்த கார் பரிசளிக்கப்பட்டதாகவும், ஷர்மிளாவை, நடிகர் கமல்ஹாசன் தனது மகள் போல் பார்த்துக் கொள்வார் என்றும் உறுதி அளித்து இருப்பதாக கூறினார். திறமைமிக்கவர்களை கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து கமல் பண்பாட்டு மையம் மற்றும் மக்கள் நீதி மையம் சார்பாக Skill Development centre தமிழ்நாட்டில் விரைவில் வருவிருப்பதாகவும், 2024 மற்றும் 2026 தேர்தலுக்காக மக்கள் நீதி மையம் கட்சியினை கட்டமைத்துக் கொண்டிருப்பதாகவும், 234 தொகுதிகளுக்கு செயலாளர்கள் நியமித்து தொகுதியை கண்காணிக்க இருப்பதாகவும்" கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா, "தற்போது இந்த காருக்கு நான் ஓட்டுநர் மட்டுமே, இன்னும் பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெற்று பின்னர் நான் முதலாளியாக மாறுவேன். கமல்ஹாசன் எனக்கு அப்பா போல் உதவி செய்துள்ளார். தொழிலில் வெற்றி பெற்று அடுத்த காரின் சாவியை நடிகர் கமல்ஹாசன் கையில் தான் வாங்குவேன்" என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!