கோயம்புத்தூர்:தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனச்சரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர், 54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளப்பதி பகுதியில், மக்னா யானை முகாமிட்டு, கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களைச் சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.
இதனையடுத்து யானை, விவசாயத் தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்ஸ்லிப் யானைகள் வளர்ப்பு முகாமிலிருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு அதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால், வனத்துறைக்குப் போக்கு காட்டிய மக்னா யானை, இரவு நேரத்தில் வெளியேறி, மூன்று கும்கி யானைகளுடன் நட்பாகப் பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றித் திரிந்தது. இதனால், அப்பகுதியிலிருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கே திருப்பி அனுப்பிவைத்தனர்.