தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கரை சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுத்துகள்கள்; மூச்சுத் திணறலால் மக்கள் அவதி

மதுக்கரை பகுதியில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் மாசுதுகள்களால், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

madukkarai cement factory
மதுக்கரை சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுத்துகள்களால், மூச்சுத் திணறல், புற்றுநோய் ஏற்படுவதாக மக்கள் புலம்பல்

By

Published : Nov 22, 2020, 3:34 PM IST

கோவை: கோவை மாவட்டம் பாலக்காடு சாலையில் மதுக்கரை பகுதியில் 80 ஆண்டுகள் பழமையான சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் மாசு காரணமாக மதுக்கரை குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆலையில் இருந்து அதிக அளவில் வெளியேறும் மாசு, வீட்டின் சுவர்களில் படிவதுடன் உணவு பொருட்களிலும் மரம், செடி, கொடிகளில் படிவதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களாக வழக்கமாக வெளியேறும் அளவைவிட அதிக அளவு மாசு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறுவதாக பொதுபமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆலையை மூடக்கோரி மதுக்கரை, குரும்பபாளையம் கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை வளாகத்தில் அண்மையில் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து அலுவலர்கள் பொதுமக்களை சமாதானம் செய்து விரைவில் தீர்வு காணப்படும் என போராட்டத்தை முடித்து வைத்தனர்.

ஆலையிலிருந்து மாசு அதிக அளவில் வருவதால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், புற்றுநோய், வயிறு தொடர்பான பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வீடுகளின் மேற்கூரைகள், கோயில் வளாகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சிமெண்ட் துகள் படிந்து வருவதாகவும், குழந்தைகளுக்கு சாப்பாடு கூட ஊட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நொந்து கொள்கின்றனர்.

மதுக்கரை சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுத்துகள்கள்

நாளொன்றுக்கு அரை கிலோ அளவில் சிமெண்ட் துகள்கள் வீட்டின் சுவர்களில் படிவதை குறிப்பிடும் மக்கள், வயதானவர்கள் முதல் குழந்தைகள்வரை பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் சூழல் ஏற்பட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இங்கே வந்து ஆய்வு மேற்கொண்டு ஆலையில் இருந்து வரும் புகையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது ஆலை இயங்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளும் கிராம மக்கள், இந்த ஆலையால் தாங்கள் சொந்த கிராமங்களில் இருந்தே வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

நாள்தோறும் வீட்டுக்கூரை மீது படியும் சிமெண்ட் துகள்கள்

உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து மதுக்கரை வட்டாட்சியர் நாகராஜிடம் கேட்டபோது," சிமெண்ட் ஆலை பிரச்னை தொடர்பாக பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஆலை நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் அதுவரை ஆலை இயங்க கூடாது என கேட்டுக் கொண்டுகொள்ளப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details