கோவை:ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்ட லுலு நிறுவனம் தமிழகத்தில் முதன் முதலாக தனது வணிகத்தை கோவையில் துவங்கியது. இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் லுலு மால் செயல்படுகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, லுலு நிறுவனம் தமிழகத்தில் 3,500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட லுலு மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று திறந்துவைத்தார். 1.32 லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலில் பிற்பகல் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய லூலு நிறுவனத்தின் உரிமையாளர் யூசூப் அலி, "தமிழக அரசுடன் ரூபாய் 3500 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக இந்த ஹைப்பர் மார்க்கெட் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் எங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுயுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாலில் புதிய 300 தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகள், குழந்தைகளுக்கென பொழுதுபோக்கு மையமாக திகழும்" என்றார்.