லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் கோயம்புத்தூர்:சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் தனது பட அனுபவங்கள் குறித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், 'லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்திருக்கிறது. மேலும், படத்தின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து ரஜினியுடன் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். நடிகர் கார்த்தி கூறியது போன்று சமூகம் சார்ந்த பணிகள் எல்லோரும் செய்ய முன்வர வேண்டும். மேலும், இரும்புக்கை மாயாவி படம் தற்போது பண்ண இயலாது. அதுதான் என்னுடைய கனவுப் படமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அண்மையில் நண்பர் விளம்பரம் பண்ணுவதற்கான ஒரு யூனிட் செட்டப் தேவைப்பட்டபோது கோவையில் கிடைக்கவில்லை. பாலக்காட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை இருந்தது என்றார். வருங்காலத்தில் கோவையில் படம் பண்ணுவதற்கான நிலை வரவேண்டும். அதற்கான முதல் அடி நான் எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறேன்.
மேலும், வங்கியில் நான்கு வருடம் வேலை செய்தேன், நமக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்ய வேண்டும். அதன்படி தான் சினிமாவிற்கு வந்துள்ளேன். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும், வசனங்களும் இல்லை'' என்றார்.
விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளார் கேள்விக்கு; ''அரசியலை பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அரை குறைவான அறிவு ஆபத்தானது என்ற பழமொழி உண்டு, ஆக அதைப் பற்றி எனக்கு தெரியாது. விஜய் நான் அண்ணன் என்று கூப்பிடுவதற்கு அவர் நல்ல மனிதர். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' என்றார்.
மேலும், ''விஜய் கூட மூன்றாவது படம் இணைய காத்திருக்கிறேன். கண்ணிமைத்தால் படம் பண்ணிருவேன். சமூக நீதி சார்ந்த படங்கள் இயக்கப் போதிய அறிவில்லை என நினைக்கிறேன். சினிமாவில் 150 ரூபாய் கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப்பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமா தான். வேற எந்த பெரிய படங்களும் எடுப்பதில்லை. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எட்டுமா என்ற கருத்தை தாண்டி எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய ஒரு 150 ரூபாய் முக்கியம். லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் பண்ணுகிறேன். அதைத் தொடர்ந்து பிறகு கைதி 2 நடக்கும்.
இந்நிலையில் வருமான வரித் துறையில் இருந்து எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள். அப்போது நான் கூறிய வார்த்தை வருமான வரி கட்டும் பணம் யாருக்கு பயன்படுகிறது என்று தெரிய வந்தால் கொடுப்பது எனக்கும் மகிழ்ச்சி என்றும், ஒரு வெளிப்படை வேண்டுமெனவும் தான் குறிப்பிட்டிருந்தேன். சமூக வலைதளங்களில் வெளியாகும் படத்தை ஒன்னும் செய்ய முடியாது.
எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் படத்தை பகிர்கிறார்கள். ஆனால் அதற்கு பின்பு ஏராளமான மக்களின் உழைப்பு இருக்கிறது. அதை தெரிந்தால் பண்ண மாட்டார்கள்'' என்றார். லியோ அப்டேட் குறித்த கேள்விக்கு; செப்டம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும். கோவைக்கு ஏதாவது பண்ணி விஜய் அவரை கூப்பிட்டு வர முயற்சி செய்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜய் அரசியலுக்கு வந்தால் நல்ல விஷயம்தான் - யுவன் ஷங்கர் ராஜா