கோயம்புத்தூர்: கொங்கு மணடலத்தின் முக்கிய நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராக வலம்வரும் கோவை மாவட்டம் இன்றளவும் தமிழ்நாட்டில் தனக்கென சிறப்பை கட்டிக்காத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை வரவேற்கவிருக்கும் வேளையில், கோவை மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
1. ஈஷாவில் மாயமான பெண் சடலமாக மீட்பு: 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காகச் சென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண், 18ஆம் தேதி அங்கிருந்து மாயமானார். பின்னர் அது குறித்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2023 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று செம்மேடு பகுதியில் உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் சடலமாக அப்பெண் மீட்கப்பட்டார். இச்சம்பவம் கோவை மக்கள் மத்தியிலும், திருப்பூர் காவல் துறையினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2.நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை:பிப்ரவரி 13ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் இரண்டு இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் மறக்க முடியாத ஒரு குற்றச்சம்பவமாக அமைந்தது. இதையடுத்து காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கோத்தகிரியில் கைது செய்தனர். அதில் இருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம், கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில், அடுத்த மாதம் மார்ச் 23ஆம் தேதியன்றே நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியது. நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம் 1 நீதிமன்ற காத்திருப்போர் பகுதியில் கவிதா என்ற பெண் அமர்ந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த கவிதாவின் கணவர் சிவக்குமார் கவிதாவின் மீது ஆசிட் வீசிச் சென்றார்.
நீதிமன்றத்தில் இருந்த தப்ப முயன்ற சிவக்குமாரை வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்திற்குள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட கவிதாவிற்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியிலும், உள்ளும் நடைபெற்ற இந்த இரு வேறு பரபரப்பான சம்பவங்களால், நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
3.தருமபுரியில் பிடிபட்ட மக்னா யானை கோவையில் செய்த சம்பவம்:தருமபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி பொள்ளாச்சி வழியாக மதுக்கரை பகுதிக்குள் புகுந்தது. அவ்வாறு புகுந்த அந்த யானை, மதுக்கரை பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுப்புறச் சுவரை இடித்தது. மேலும் அதனை விரட்டச் சென்ற காவல்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து கோவை வனப்பகுதிக்குள் நுழைந்த அந்த மக்னா யானை, குனியமுத்தூர் பகுதிக்குள் நுழைந்தது. இதனை விரட்டுவதற்கு 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சின்னத்தம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டும், மயக்க ஊசி செலுத்தியும் மக்னா யானை பிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களாக கோவையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த அந்த யானை, பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை மருத்துவக் குழுவினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது கோவை மக்களிடையே மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
4. அதிக சத்துமாத்திரைகள் உட்கொண்ட பள்ளி மாணவிகள்:உதகை நகராட்சி காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்டனர். அதனையடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆம்புலன்ஸ் மூலம் பள்ளியிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழிநெடுகிலும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து, ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டனர். கோவை அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
5. வடமாநில மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்:திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வட மாநிலத் தொழிலாளிகள் மீது மக்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து அதிகமான வட மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்பினர். இதனால் தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினர்.
இருப்பினும் இச்சம்பவம் வட மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பினர். இச்சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில அரசு குழுவினர்கள் கோவை உயர் அதிகாரிகள் உடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டனர்.