கோயம்புத்தூர்:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நாளை (அக்.18) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. என்னதான் விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ட்ரெய்லரைக் கொண்டாடினாலும், படத்தின் ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததால் முக்குக்கு முக்கு சர்ச்சை வெடித்தது.
குறிப்பாக அனைவரின் கவனமும் பெற்ற திரைப்படத்தின் ட்ரெய்லரில், இப்படிப் பேசியது தவறு என்று விமர்சனங்கள் வலுத்தன.
இதற்கிடையே லியோ சிறப்புக் காட்சி தொடர்பாகப் பிரச்சனை நீடித்து வந்தது. இதனை எதிர்கொள்ளும் விதமாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில், முதல் காட்சி 9 மணிக்குத் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (அக்.19) காலை 9 மணிக்குப் படம் வெளியாக உள்ள நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - சோமனூர் சாலையில் உள்ள சவிதா திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டாட்டத்துக்குத் தயாராகி வந்தனர். சுமார் 50 அடி நீள பிளக்ஸ் பேனர்களில் "கழுகு கூட்டம் மொத்தமும் காணாமல் போகும்டா.. இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சியடா.. தலைவா நீங்க ஆளனும்.. மக்கள் வாழனும்.." என்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தன. சர்ச்சைக்கு பஞ்சமில்லாது என்று இருந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு கூடுதலாக வெடித்துள்ளது இந்த வசனங்கள் கொண்ட பேனர்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நொடிகளில் வைரலானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், போக்குவரத்திற்கு இடையூராகவும், விபத்து ஏற்படும் வகையிலும் உள்ளதால் அனுமதி பெறாத பேனரை அகற்றுமாறு ரசிகர்களிடம் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பேனர்களை அகற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி ராட்சத பேனர்கள் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய காவல் துறையினர், அங்கிருந்த பேனர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றினர். இதனால் திரையரங்கு முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:அஜித்தை வைத்து படம் இயக்குவது என்னுடைய மிகப்பெரிய ஆசை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!