பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும், சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே உள்ள திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பெண்களுக்கும் வேலைவாய்ப்பு, உழைக்கும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடலூர்
பெண் தொழிலாளர்களுக்கு வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடலூர் சிஐடியு அலுவலகம் அருகில் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் சாலை மறியல் போராட்டம் செய்வதற்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்து அவர்களை கைது செய்தனர்.