தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவர் கனவு... கண் கலங்கும் பழங்குடியின மாணவி! - பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்

கோயம்புத்தூர் அருகே மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் பழங்குடியின மாணவிகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். சாலை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

lack of road facilities near Coimbatore tribal students struggle to pursue schooling
சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவ கனவு கண் கலங்கும் பழங்குடியின மாணவி

By

Published : Aug 19, 2023, 10:49 AM IST

Updated : Aug 19, 2023, 10:25 PM IST

கோயம்புத்தூர் அருகே மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் பழங்குடியின மாணவிகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத அவல நிலை குறித்த செய்தி தொகுப்பு

கோயம்புத்தூர்: கேரள மாநில எல்லையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் வனப்பகுதியை ஒட்டி சின்னாம்பதி, ஜயம்பதி, முருகன்பதி ஆகிய இருளர் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள முருகன்பதி கிராமத்தில் 85 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு 5ஆம் வகுப்பு படித்த பின்னர் நடுநிலைப் பள்ளிக்காக நவக்கரைக்கும், உயர்நிலை பள்ளிக்காக மாவுத்தம்பதிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் போதுமான சாலை வசதியும், பேருந்து வசதியும் இல்லாததால் குழந்தைகள் பள்ளி செல்வது தடைபட்டு உள்ளது.

மேலும் பாதியிலேயே கல்வியை கைவிட்டு விவசாய கூலி வேலைக்கு செல்லும் அவலம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவுத்தம்பதி ஊராட்சி கவுன்சிலர் சுதாகர் கூறுகையில், "இப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு நடுநிலைப் பள்ளிக்காக நவக்கரை வரை நடந்து செல்ல வேண்டும். ஆனால் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. இப்பகுதியில் ரயில்வே பாதை அமைத்த பிறகு, பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ரயில் பாதையை கடப்பதற்காக கிராம மக்கள் தங்களுடைய சொந்த நிதியை பயன்படுத்தி, தனியாரிடம் நிலத்தை வாங்கி அங்கு சுரங்கப்பாதை அமைத்து சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் அப்படியே தேங்கி உள்ளதால், பள்ளிக்கு செல்வதில்லை. இருசக்கர வாகனம் உள்ளவர்கள் மட்டும் தங்களுடைய குழந்தைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

முருகன்பதியில் இருந்து நவக்கரை வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சாலை வசதி மேம்படுத்தி கொடுத்து, பேருந்து வசதி செய்து கொடுத்தால் இங்கு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அக்கிராம பட்டதாரி பெண் கல்பனா கூறுகையில், "ஐந்தாம் வகுப்பு முடித்த பின்னர் சுமார் 10 வருடம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வந்தேன். அப்போது வனவிலங்குகள் நடமாட்டம் தொந்தரவு இல்லாததால் நடந்து சென்றோம். ஆனால் இப்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நடந்து செல்ல வேண்டும் என்ற பயத்தினாலேயே, பலர் படிக்க செல்லாமல் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பெற்றோர்களே குழந்தைகளை படிக்க அனுப்புவதில்லை.

பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வரக்கூட முடியவில்லை. மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். குழந்தைகள் கல்வி பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சாலை, பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவி ஹரிப்பிரியா, "ஐந்தாம் வகுப்பு முடித்த பின்னர் நவக்கரையில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ஒரு மாதம் சென்ற நிலையில், என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. தான் நன்கு படித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த நிலையில் பள்ளி செல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது" எனக் கூறினார்.

அக்கிராமத்தை சேர்ந்த பவித்ரா கூறுகையில், "சாலை வசதி இல்லாததால் 11ஆம் வகுப்பு படிப்பை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். கல்வி கற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, சாலை வசதி இல்லாததால் நிறைவேறாமல் போனது" என வேதனை தெரிவித்தார். பழங்குடியின குழந்தைகள் தடையின்றி கல்வி பயில சாலை மற்றும் பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தருமா? என்பதே இப்பகுதி மக்களின் ஏக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: திருப்புமுனை ஏற்படுத்துமா அதிமுகவின் பொன்விழா மாநாடு?.. ஒரு அலசல்!

Last Updated : Aug 19, 2023, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details