கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக கீதா தங்கராஜ் பதவி வகித்து வருகிறார். மேலும், துணைத் தலைவராக மூர்த்தி என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஓராண்டாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், போலியாக ரசீது அச்சடித்து பணம் வசூலிப்பதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும், துணைத் தலைவர் மூர்த்தி புகார் மனு அனுப்பி இருந்தார்.
அந்த வகையில், இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் கீதா, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தைக் கோவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மூலம், கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்ற கீதா, தற்போது காசோலைகளில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், துணைத்தலைவர் மூர்த்தி, தொழில் நிறுவனங்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் கமிஷன் கேட்பதாகவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், காசோலையில் கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றம் சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு அனுப்பி இருந்தனர்.