கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் கால், உடல் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நடக்க முடியாமல் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இது குறித்து கடந்த 9ஆம் தேதி வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து காயம்பட்ட யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், காயத்துடன் சுற்றி வரும் ஆண் காட்டுயானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக, சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து 23, 35 வயதுடைய கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன.