கோயம்புத்தூர்: தருமபுரி பகுதியில் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தி வந்த மக்னா யானையைக் கடந்த 5 ஆம் தேதி கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் 6 ஆம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேலும் அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்குச் சென்றது. நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோமீட்டருக்கு மேல் பல்வேறு பகுதியில் சுற்றி நேற்று கோவை பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது. பின்னர் மதுக்காரையிலிருந்து குனியமுத்தூர் பி.கே புதூர் பகுதியில் காலை முதல் இரவு வரை ஒரே பகுதியில் நின்றது.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு பிகே புதூர் பகுதியிலிருந்து இடையர்பாளையம் பகுதிக்குச் சென்றது மக்னா யானை. பின் இரவு அங்குள்ள தோட்டத்தில் உள்ள வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களைச் சேதப்படுத்தியது. நேற்று இரவு 4 மணி வரை வனத்துறையினரின் கண்பார்வையிலிருந்த யானை 4 மணிக்கு மேல் வனத்துறையினர் கண்காணிப்பிலிருந்து விலகியது. தொடர்ந்து இன்று காலை 6:00 மணி அளவில் மீண்டும் செல்வபுரம், புட்டு விக்கி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் வந்தது.