கோவை: ஓபிஎஸ் ஆதரவாளரும், கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள ஏகே செல்வராஜ் அவிநாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக எம் ஜி ஆர், ஜெயலலிதா வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் படுதோல்வியை சந்திக்க வைத்தனர். இவர்களெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களான காரணத்தினால் தான் கோவை மாவட்டத்தில் கட்சி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதனை கட்டிக் காப்பதற்காக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமபுறம் லன்கள் முழுவதும் சைக்கிள் பேரணி எனது தலைமையில் நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதத்தில் ஓபிஎஸ் தலைமையில் வ.உ.சி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். கடந்த 11ஆம் தேதி அவர்கள் நடத்திய பொதுக்குழு செல்லாத பொதுக்குழு. அதில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது செல்லவில்லை, அவரால் நியமிக்கப்பட்டதும், நீக்கப்பட்டதும் செல்லவில்லை.
இவர்கள் கூறியதையும் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே இவர்கள் பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் பட்டாவோடு அதிமுகவை நடத்தி வருகிறார். அதிமுக என்பது ஒருங்கிணைப்பாளர் தலைமையில் உள்ள இயக்கம். இவர்களுக்கு இன்னும் எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படாததால் 72 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.