கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள புலியகுளம் பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர். குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் நான்கு பேரை குண்டர் தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
கோவை காவல் ஆணையர் அலுவலகம் இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கோவை - ராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள புலியகுளம் ஆறுமுகம் வீதியில் வசித்துவரும் விஷ்ணு என்பவரை, கடந்த மாதம் 8ஆம் தேதியன்று, சார்லஸ் ஸ்ரீராம் (21), உதய் விக்ரம் (20), ஜாக்கி என்ற பிரதீப் (23), உத்திரமணிகண்டன் (20) ஆகிய நான்கு பேரும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அதேபோல, அவரது நண்பர்களான அஜித் குமார், ராஜேஷ் என்பவர்களையும் அரிவாளால் காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து அவரின் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஏற்கெனவே இவர்கள் மீது கஞ்சா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றவாளிகள் நான்கு பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள நான்கு பேருக்கும் இதற்கான ஆணையை காவல் துறையினர் அவர்களிடம் வழங்கினர். மேலும் இதுபோன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சொகுசு கார்.. 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்.. இது என்னடா ராஜமாதாவுக்கு வந்த சோதனை!