கோவை:தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில், மலையடிவார கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் பாலம் நீருக்கடியில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மலையடிவார கிராமங்களான காந்தவயல், காந்தையூர், ஆளூர், உளியூர் என நான்கு கிராம மக்கள் பவானி ஆற்றின் கிளை ஆறான காந்தையாற்றை கடந்தே சிறுமுகை வந்தடைய வேண்டும். பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்க தொடங்கி விடும்.
பாலம் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலம் காட்டாறான காந்தையாற்றை கடந்து நகர பகுதிக்கு சென்று திரும்பி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், கல்வி, வேலை என அனைத்திற்கும் இப்பகுதி மக்கள் லிங்காபுரம் வழியே நகரப் பகுதிக்கு வர வேண்டிய சூழலில், வேறு வழியின்றி இம்மக்கள் பரிசல் பயணத்தையே நம்பி உள்ளனர். இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.