உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத் துறை, காவல் துறை என அனைத்து துறைகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அருள்ராசுவின் உத்தரவின்படி கடுமையான பணிச் சுமைக்கு நடுவே மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் என விளிம்பு நிலை மனிதர்களுக்கு உணவு வழங்குவது, மருத்துவ ஏற்பாடுகள் செய்து தருவது என பல்வேறு சமூகப் பணிகளை கோவை காவல் துறையினர் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்திற்குட்பட்ட தென்சங்கம்பாளையம் கிராமப் பகுதியில் சுற்றித்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை மீட்ட காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவல் துறையினரின் குழு, அவருக்கு முடி திருத்தி, குளிப்பாட்டி புத்தம்புதிய ஆடை அணிவித்துள்ளனர். இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த நபரை தனது வாகனத்தில் ஏற்றி சென்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு பணிச்சுமைகளுக்கு நடுவே மனிதாபிமானத்தோடு காவல் துறையினர் ஆற்றிய இச்செயல், கோவை மக்கள் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.