கோவை மாவட்டம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுந்தராபுரம் பகுதியில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், " கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கோவையில் பல இடங்களில் மக்கள் மழைநீரை வெளியேற முடியாத நிலை உள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் ஸ்மார்ட் சிட்டி என்று கூறுவதுபோல் தெரிகிறது. மாநகராட்சி பணிகள் நடைபெறும் எந்த திட்டப் பணிகளும் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இ டெண்டர் எடுக்க முடியும் என்று முதலமைச்சர் கூறினாலும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
அரசின் திட்டப் பணிகள் பலவும் அமைச்சர் கூறும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. துக்ளக் விழாவில் நீதிபதி குறித்த குருமூர்த்தியின் சர்ச்சை பேச்சுக்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கை பொறுத்தவரை யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சிபிஐயும் தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது திமுகவிற்கு இருக்கின்றது என்பதை திமுக தலைவர் கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது மேலும் விவசாயிகளுக்கு எங்களின் ஆதரவு தொடரும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கரோனா வைரஸ் தடுப்பூசியை யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் தேர்தல் வரப்போகிறது என்பதற்காக முழுமையாக பரிசோதனையை முடிக்காமல் அவசரப்பட்டு செய்து ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டுவிட கூடாது என்ற எச்சரிகையைத்தான் இன்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்று முன்வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அரசினுடைய பொறுப்பு” என்றார்.