கோவை:எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியின் வேட்பாளராக அக்கட்சியின் கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிரிமியர் செல்வம் என்கிற காளிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று காலை சென்னியாண்டவர் கோயில் பகுதியில் இருந்து தனது பரப்புரையைத் தொடங்க திட்டமிட்ட அவர், முதல்கட்டமாக கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் கருமத்தம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தற்போதைய அதிமுக ஆட்சியில் சூலூர் தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இடைத்தேர்தல் பரப்புரைக்காக சூலூர் தொகுதி வந்த முதலமைச்சர் பழனிசாமி விசைத்தறியாளர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும், ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
சூலூர் கொமதேக வேட்பாளர் பிரிமியர் செல்வம் பேட்டி அதேபோல் தென்னை விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் தருவோம் என்றெல்லாம் தெரிவித்தார். ஆனால் அதுதொடர்பாக, எந்த ஒரு நடவடிக்கையும் கடந்த ஆட்சியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்சாலை பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வழிகாட்டுதலின் பேரில் வாரப்பட்டி சிப்காட் தொழிற்சாலை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்படும், விசைத்தறியாளர்கள் கடன்கள் ரத்து செய்யப்பட்டு நீண்ட ஆண்டு கோரிக்கையான ஜவுளி பூங்கா சோமனூர் பகுதியில் அமைக்கப்படும்" என வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க:திமுக ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகள் அயராது உழைக்கும்- ஈஸ்வரன்