கோயம்புத்தூர்:கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பெருவாம்பூர் பகுதியில், பிரசாந்த் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்குக் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தார். இதில், ரூ.100 கோடி வசூலான உடன், பிரசாந்த் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள், இது குறித்து பெருவாம்பூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், கேரள போலீசார் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்டவரைத் தேடி வந்தனர்.
மேலும், பிரசாந்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போன் உரையாடல் வைத்துக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே தேவராயபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் வேலை செய்யும் நபரிடமிருந்து பிரசாந்த் செல்போனில் பேசியபோது கேரளா போலீசாருக்கு சிக்னல் கிடைத்தது.
இதையடுத்து பொள்ளாச்சி சென்ற கேரள தனிப்படை போலீசார் சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் பிரசாந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை கேரளா அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகு பணம் குறித்த தகவல் வெளியிடப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது!