தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள அரசு மீண்டும் அடாவடி: சிறுவாணி அணையின் பழைய குழாயை மூடும் பணி தீவிரம்!

கோவை: தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் கேரள அரசு, சிறுவாணி அணையின் பழைய குழாயை மூடும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இதனால், கோவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

By

Published : May 26, 2020, 4:54 PM IST

கோவைச் செய்திகள்  சிறுவாணி அணைப் பிரச்னை  கோவை ராமகிருட்டிணன்  தபெதிக  kerala govt Atrocity in siruvani dam  siruvani dam  சிறுவாணி அணை  தமிழ்நாடு அரசு  குடிநீர் வாரிய அலுவலர்கள்
கேரள அரசு மீண்டும் அடாவடி: சிறுவாணி அணையின் பழைய குழாயை மூடும் பணி தீவிரம்

கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 50 அடி வரை நீரைத் தேக்க முடியும். இதிலிருந்து கோவைக்கு நாள்தோறும் 70 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்படுகிறது. மேலும், சாடிவயல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கோவை வரையுள்ள 22 கிராமங்களுக்கு இந்த நீர் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் பிரதான குடிநீர் ஆதராமாக சிறுவாணி நீர் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு கனமழை பெய்தபோது சாடிவயல், மன்னார்காடு வழியாக சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர்கள் அணைக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியது. அதே காலகட்டத்தில்தான் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அணையிலிருந்து கேரள நீர்ப்பாசனத்துறையினர் தண்ணீரை வெளியேற்றினர்.

சிறுவாணி அணை

தற்போது அணையின் நீர்மட்டம் 8.5 அடியாக குறைந்துள்ளதால், நான்கு குழாய்களில் மூன்றாவது குழாய் வெளியே தெரிகிறது. மேலும், அப்பகுதியில் 200 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நிரந்தர நீர் இருப்பு பகுதியிலுள்ள பழைய குழாயினை தமிழ்நாடு அலுவலர்களுக்குத் தெரியாமல் கேரள நீர்பாசன அலுவலர்கள் மூடிவருகின்றனர். கரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்கள் அணைக்குச் செல்லமுடியாத சூழலைப் பயன்படுத்தி இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு அலுவலர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாடிவயல் வழியாக சிறுவாணி அணைக்குச் செல்ல முயற்சி செய்தபோது கேரள வனத்துறையினர், கேரள அலுவலர்களின் அனுமதியில்லாமல் அனுமதிக்க முடியாது எனக்கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளனர். பழைய குழாயை மூடும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.

கேரளவின் அடவாடி நடவடிக்கை குறித்துப் பேட்டியளித்த கோவை ராமகிருட்டிணன்

இதுகுறித்து பேசிய குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், "சிறுவாணி அணையில் எந்த ஒரு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டாலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது. பராமரிப்பு பணிகளுக்கான செலவினங்களை தமிழ்நாடு அரசுதான் கொடுக்கிறது. கரோனா வைரஸ் காரணமாக கடந்த 60 நாட்களாக அணைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகள் அல்லது வேறு எந்த பணிகளையும் எங்களுக்கு தெரியாமல் மேற்கொள்ளக்கூடாது என கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம்.

ஆனால் அதனை மீறி தற்போது இந்த பழைய குழாயை அடைத்து வருகின்றனர். இது வறட்சி காலங்களில் கோவையின் குடிநீர் தேவைக்கு கைகொடுக்கும், இதன் மூலமாக போதுமான குடிநீர் கிடைத்துவந்தது. இதை அடைத்தால் கோவைக்கு வரும் குடிநீரின் அளவு குறையும். எனவே, இரு மாநில அரசுகளும் உடனடியாக அமர்ந்து பேசி குழாயை மூடும் பணியை நிறுத்த வேண்டும்" என தெரிவித்தனர்.

கேரள அரசின் அடாவடி நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மக்களைத் திரட்டி பேராட்டம் நடத்துவோம் என தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு கோவைக்கு குடிநீர் வரக்கூடிய பழைய குழாய் ஒன்றை கேரள அரசு மூடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மின் கட்டணம் செலுத்த மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details