கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தலை எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விளக்கம் கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் படுகொலைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்கின்ற நிலையில் இருந்து வெகு சீக்கிரம் கீழே இறங்கிவிடும் போல் தெரிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கை கவனிக்க வேண்டும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கோவையில் குடிநீர் பிரச்னை 15 நாட்களில் சீராகும் என சட்டமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதுவரை லாரியில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.