கோவை:விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அறிக்கைகளும் கமல்ஹாசன் பெயரில் இல்லாமல் கட்சியின் பெயரிலேயே வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் விக்ரம் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற கமல்ஹாசன் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், 800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், 1 கழிவறை தான் இருக்கிறது என விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை வெற்றி பெற்றவர்கள் நிறைவேற்றவில்லை என்றாலும் எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள் செய்கிறோம் என்றார். மாநிலம் முழுவதும் கிராம சபை தூசி தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம் எனவும் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்தார்.
மக்கள் நீதிமய்யம் செய்யும் சேவைகள் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகத்திற்கான உறவு என கமல் கூறினார். நாங்கள் கட்டி தரும் கழிப்பறையை ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நான் பார்க்க வருவேன். கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் நானே சுத்தம் செய்வேன். மேலும் நான்கு கழிப்பறைகள் கட்டிதருகிறோம். எம்.எல்.ஏ தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்தோம் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்கடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கமல் தெரிவித்தார்.